பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் காட்டு தீ போல் பரவி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். கடந்த 4 நாட்களில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்தது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த, மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.



மேலும், நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், மால்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறப்பற்கான கட்டுப்பாட்டை, இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்குவதால், ஜூன் மாத இறுதியில் கல்விக் கூடங்களைத் திறக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாகவும், இறுதியாகப் பள்ளி - கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் என்று, மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எழுந்தது. இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.