கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி​ உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு தொலைப்பேசியில் ஆறுதல்” கூறியதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், “எதிர்கால நலன் கருதி, தைரியமாக இருக்க வேண்டும் என்று மருத்துவரின் மகனுக்கு ஆறுதல்” கூறியதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல், அவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தொகை 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

“கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களின் உடல், உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும், கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு அரசு ஊழியர், தனியார் பணியாளர் உயிரிழந்தால் பணியை பாராட்டி விருது, சான்றிதழ் வழங்கப்படும்” என்றும் கூறினார்.

அதேபோல், “கொரோனா தடுப்பு பணியின் போது, தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

குறிப்பாக, “சென்னையில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையைக் கணிசமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகர கூடுதல் மண்டல அலுவலர்களாகக் கார்த்திகேயன், பாஸ்கரன் நியமனம்” செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தக் கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா நிவாரணம் நிதியாக நடிகர் விஜய், ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதில், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், பெப்சி தொழிலாளர் நிதிக்கு மீதி தொகையும் நடிகர் விஜய் வழங்கி உள்ளார்.