தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அனைத்து வகையான நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் என அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டன.

இதனையடுத்து, கடந்த 4 ஆம் தேதி, 3 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளையும் மத்திய அரசு அளித்தது.

அதன்படி டெல்லி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, ஊரடங்கு உத்தரவு முடியும் வரை, டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னையில் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு உள்ளதால், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது, என்று தமிழக அரசு அறிவித்தது.

அத்துடன், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய திமுக, சில அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.

“5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நிற்க வேண்டும்” என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மது கடைகள் திறப்பது சமூக தொற்று பரவும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்றும், மதுக்கடைகளைத் திறக்க ஆர்வம் காட்டும் அ.தி.மு.க. அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணிவீர்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக, “கொரோனாவை கட்டுப்படுத்துவதில், தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது” என்றும், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.