கொரோனா அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தப்பட்டவர், வீட்டு வாசலில் படுத்திருந்த மூதாட்டியைக் கடித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியவர்கள் அனைவரும், அவர்களது வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர். அப்படி, தனிமைப்படுத்தப்படுபவர்களின் வீடுகளில் எச்சரிக்கை செய்யும் விதமாக, அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால், தனிமையில் இருப்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தேனி மாவட்டம் ஜக்கமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான மணிகண்கடன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கை சென்று ஊர் திரும்பினார். இதனையடுத்து, கொரோனா அச்சம் காரணமாக ஊர் திரும்பியவரை மாவட்ட சுகாதாரத்துறை, அவரை வீட்டுக்கண்காணிப்பில் தனிமைப்படுத்தியது.

இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்த மணிகண்டன், தனது வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த 90 வயது மூதாட்டி நாச்சியம்மாளை கழுத்தில் கடித்துள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் நாச்சியம்மாளின் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து மணிகண்டனை தடுக்க முயன்றனர். அப்போது, மணிகண்டன் அவர்களைத் தாக்க முயன்றதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டிப்போட்டனர். அத்துடன், ரத்த வெள்ளத்தில் மிதந்த நாச்சியம்மாளை மீட்டு, தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டன் கையில், சுகாதாரத்துறையின் கொரோனா எச்சரிக்கை சீல் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்துள்ளனர்.

அப்போது, மணிகண்டன் தொடர்ந்து தனிமையாக வைக்கப்பட்டிருந்ததால், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டது போல நடந்துகொண்டாகவும் கூறப்படுகிறது.

மேலும், மணிகண்டன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட நபர், வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியைக் கடித்துக்கொன்ற சம்பவம் தேனியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.