பேரழகியை சந்திக்க வைப்பதாகக் கூறி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரிடம் 11.75 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இணையம், பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு அறிவுப் பூர்வமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அந்த இணையத்தில் பல விதமான மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. 

Officer scammed Rs 11lakh to meet Mumbai model

குறிப்பாக, இணையத்தில் பெண்கள் மற்றும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை முதலீடாக்கி, அதன் மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் இணையத்தில் அதிகம். இதுபோன்ற செய்திகள் கடந்த காலங்களில் நிறைய நடந்திருந்தாலும், இப்படியான ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. அதுவும், அதில் ஏமார்ந்தவர் சாமானிய பொதுமக்கள் இல்லை. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் என்றால், நம்மால் நம்ப முடிகிறதா? ஆம், அது தான் உண்மை. 

மும்பை மஜ்காவ் டக்யார்டு பகுதியில் பணியாற்றி வரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் ஃபேஸ்புக் மூலம் மேக் மை பிரண்டு என்னும் சமூக வலைத்தள பக்கத்தில் தன் பெயர் மற்றும் தன்னுடைய செல்போனை பதிவு செய்துள்ளார். அந்த சமூக வலைத்தளம் அழகிகளுடன் நெருங்கிப் பழகும் தளம் என்று கூறப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு, ஆரோகி என்ற ஒரு பெண் போன் செய்து, இதற்குச் சேவை கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி, கணிசமான ஒரு தொகையைப் பெற்றுள்ளார்.

Officer scammed Rs 11lakh to meet Mumbai model

அதனைத்தொடர்ந்த, தியா என்ற பெண் தொடர்புகொண்டு, பல அழகிகளின் பெயர்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரருக்குப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்க, இவரும் அதில் பெயரைத் தேர்வு செய்துள்ளார். பின்னர், நேரில் சந்திக்க வைக்க வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கூறி, அந்த தொகையைச் செலுத்த வேண்டும் என்று கூறி, அவரிடம் மேலும் சில ஆயிரங்களை பறித்துள்ளனர்.

பின்னர் அந்த பெண், பாதுகாப்புப் படை வீரர் தேர்வு செய்த நேகா சர்மா என்ற பெண்ணின் படம் மற்றும் போன் நம்பரை, அவருக்கு அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரர் நேகா சர்மாவை தொடர்பு கொண்டார். இதில், நேகா சர்மாவும் சில பல காரணங்களைக் கூறி பாதுகாப்புப் படை வீரரிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகப் பறித்துள்ளார். 

இப்படியாக 17 நாட்கள் கடந்துள்ளது. இந்த 17 நாட்களும் அந்த பாதுகாப்புப் படை வீரர் நாள்தோறும் பணத்தை இழந்துள்ளார். இப்படியாக ஒட்டுமொத்தமாக அவர் 11.75 லட்சம் ரூபாய் பணத்தை, அந்த மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

இதனையடுத்து, தாம் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அவர், இந்த மோசடி கும்பல் குறித்து, அங்குள்ள சிவ்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சமூக வலைத்தளங்களில் நூதன முறையில் ஏமாற்றிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். 

“ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதைத் தாண்டி, சபலம் பேரிழப்பை ஏற்படுத்தும்” என்பதற்கு, இந்த பாதுகாப்புப் படை வீரரிடம் கதையே சாட்சி.