சென்னை தவிரத் தமிழகத்தின் பிற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கத் தொடங்கியது.

தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக, 4 வது ஊரடங்கு முதல் பல்வேறு தளர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தமிழக அரசு அறிவித்து வந்தன.

அதன்படி, தமிழகத்தில் இன்று முதல், வரும் 30 ஆம் தேதி வரை 5 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 5 வது ஊரடங்கு காலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு பல்வேறு விதமான தளர்வுகளை மேலும் அதிகரித்துள்ளது. அந்த தளர்வுகள் அனைத்தும் இன்று காலை முதல் அமலுக்கு வந்தன.

இதனால், சென்னை தவிர்த்து தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 100 சதவீத பணியாளர்கள் பணிக்கு வரத்தொடங்கினார்கள்.

ஆனாலும், முடிந்த வரை பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிவதைத் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மால்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய அளவிலான நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படத் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், இந்த கடைகள் எல்லாம் தற்போது படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு நீங்கலாக, தமிழகத்தின் பிற பகுதிகளில், இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வருகிறது.