தனியார் பால் மற்றும் தயிர் பாக்கெட்டின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், டீ விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதும் வாடிக்கையான ஒன்று தான். ஆனால், தனியார் நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் எப்போதோ ஒரு முறை தான் விலை உயர்த்தப்படும்.

அப்படி உயர்த்தப்படும்போது, அந்த உணவை அதுவரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும், வாடிக்கையான ஒரு நிகழ்வு தான்.

அந்த வகையில், உணவுப் பொருட்களின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், விற்பனை விலையை உயர்த்த இருப்பதாகத் தனியார் பால் நிறுவனங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தன.

அதன்படி, ஹெரிடேஜ், டோட்லா, ஆரோக்கிய ஆகிய நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், அர்ஜூனா நிறுவனம் லிட்டருக்கு 4 ரூபாயும் இன்று முதல் விலையை உயர்த்தி உள்ளன.

சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 48 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 52 ரூபாயிலிருந்து இருந்து 56 ரூபாயாகவும், கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் 60 ரூபாய்லிருந்து 62 ரூபாயாகவும் விலை உயர்ந்து, இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

அதேபோன்று, தயிர் விலையும் லிட்டர் 58 ரூபாயிலிருந்து, 62 ரூபாயாக உயர்ந்துள்ளது. 10 ரூபாய் தயிர் பாக்கெட்டின் விலையும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக, பாலிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற உணவுப் பொருட்களின் விலையும், இன்று முதல் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.