குடும்ப பிரச்சனை காரணமாக, 8 மாத கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப் பட்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, மணிகண்டனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தற்போது, மணிகண்டன் - ஷோபானா தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஷோபானா தற்போது 4 வது முறையாகக் கருவுற்று 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இன்னும் 2 மாதத்தில் அவருக்கு 4 வது குழந்தை பிறந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் குடும்பத்தில் வரதட்சணை கோரத் தாண்டவம் ஆடி உள்ளது.

மணிகண்டன் - ஷோபானா தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டதால், அவர்கள் வீட்டில் சீர் வரிசை எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அம்மா வீட்டிற்குச் சென்று சீர் வரிசைகளை பெற்றுக்கொண்டு வர வேண்டும் என்று, வரதட்சணை கேட்டு கணவர் மணிகண்டன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், மனைவி ஷோபனாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, “எப்ப பார்த்தாலும் பெண் குழந்தை தான் பெற்றுத் தருகிறாய். நீ பெற்ற மூன்று குழந்தைகளுமே வரிசையாகப் பெண் குழந்தையாக உள்ளது. ஒரு ஆண் குழந்தை கொடுக்க முடியவில்லையா?” என்று கூறியும், வரதட்சனை கேட்டும் மனைவி ஷோபனாவா 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதைக் கூட மறந்து அவரை தாக்கி உள்ளார்.

கணவர் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார் ஷோபனா. இதனையடுத்து, பயந்துபோன மணிகண்டன், மயங்கிய மனைவியைத் தூக்கிக்கொண்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, ஷோபனாவாவை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மனைவியின் உடலை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த தகவல் ஷோபனாவின் உறவினர்களுக்குத் தெரிய வந்த நிலையல், சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன்பு திரண்டனர். அப்போது, ஷோபனாவாவை அடித்து கொலை செய்த மணிகண்டன் மற்றும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்த மணிகண்டனின் தாய், தந்தை ஆகியோரையும் உடனடியாக கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், மணிகண்டனை கைது செய்வதாக உறுதி அளித்தனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர். அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வரதட்சணை கேட்டு 8 மாத கர்ப்பிணியை, கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலை பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.