உத்தரப்பிரதேசத்தில் 23 குழந்தைகளைத் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நபரைச் சுட்டுக்கொன்று, குழந்தைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பருக்காபாத் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் பாதம், கொலை வழக்கில் சிறை சென்று, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்ட அவர், அருகில் உள்ள அனைவரையும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனையடுத்து, குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவர்கள் மொத்தம் 23 பேர் அவர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர், பெண்கள் குழந்தைகள் என 23 பேரையும் சிறை பிடித்த சுபாஷ் பாதம், அவர்களை மிரட்டத் தொடங்கி உள்ளான்.

இந்த தகவல் போலீசாருக்கு எப்படியோ தெரிந்த நிலையில், தனிப்படையுடன் விரைந்து வந்த போலீசார், அவனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் எந்த பயனும் இல்லை.

பின்னர், அவனை நெருங்க போலீசார் முயன்றபோது, போலீசாரை விரட்டுவதற்காக, கையெறி குண்டுகளை வீசினான். இதனால், போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், தன்னிடம் 35 கிலோ எடை உள்ள வெடிகுண்டுகள் இருப்பதாகவும், போலீசாரை அவன் எச்சரித்தான்.

இதனையடுத்து, தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இந்த செய்தி, அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியாதல், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு படையெடுக்கத் தொடங்கினர்.

பின்னர், அவனைப் பற்றி அந்த கிராம மக்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, “ தன் மீது போடப்பட்ட கொலை வழக்கு, பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கும் என்றும், அதிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்” என்றும் நீண்ட நாட்களாக அவன் கூறி வந்ததாகத் தெரியவந்தது.

இதனிடையே, சுமார் 8 மணி நேரம் போராடிய போலீசார், வேறு வழியின்றி, அவனை சுட்டுக் கொலை செய்தனர். இதனையடுத்து, அவன் பிடியிலிருந்த குழந்தைகள் பெண்கள் என 23 பேரையும், போலீசார் பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த போலீசார், “சுபாஷ் பாதம், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.