ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி தயாராக உள்ள நிலையில், நாளை முதல் மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதனால் ஏற்பாடும் பாதிப்பும், உயிரிழப்பும் பல லட்சங்களைத் தாண்டி உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அது தொடர்பான பணிகள் ஒரு பக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும், COVID19 தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி, தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடித்து விடலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், COVID19 தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. தற்போது புதிதாக கண்டுபிடித்துள்ள தடுப்பூசியைக்கொண்டு, மனிதர்களைப் பரிசோதிக்கும் சோதனை முயற்சியானது, நாளை தொடங்குகிறது.

ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழுவுக்கு அவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளிக்க இங்கிலாந்து அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் வழங்கும் நிலையில், லண்டனின் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு மேலும் 22.5 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.