நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில், 5 பேர் கொண்ட கும்பலால் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரண வேதனை அனுபவித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பின்னர், தண்டனையைக் குறைக்கச் சொல்லி, ஒன்றன்பின் ஒருவராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். எனினும், இந்த மனுவை எல்லாம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளி வினய்க்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டி உள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சிங், திகார் சிறை அதிகாரிகள் குறிப்பிட்ட சில ஆவணங்களை ஒப்படைக்கக் காலதாமதம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, வினய் சர்மா சிறை எண் 4க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையிலும், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையிலும் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

சிறையில் அளித்த சிகிச்சை பற்றிய சான்றுகளைப் பார்க்க நாங்கள் விரும்புவதாகவும், இந்த ஆவணங்கள் எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எனினும், வினய் சரியான நிலையில் இல்லை என்றும், அவர் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார் என்றும் சிறைத் துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என வினயின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறியுள்ளார். இதன் காரணமாக, நிர்பயா வழக்கில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.