தமிழகத்தில் கடைகள் திறந்திருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால். சிலர் அதை மீறி சாலைகளில் நடமாடுவதாகவும், இருசக்கர வாகனம் மற்றும் காரில் ஊரை சுற்றுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதனால். தமிழகம் முழுவதும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டிற்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை பொருட்களை வாங்குவதாகு பொதுமக்கள் நிறையப் பேர் வெளியே வருவதாகவும், அப்படி வெளியே வருபவர்கள் யாரும், சமூக பரவலைத் தடுக்கும் வண்ணம் விதிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை என்றும் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, தமிழகத்தில் கடைகள் திறந்திருக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை கோயம்பேடு உட்பட காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட உணவு சம்பந்தமான கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் பழ அங்காடிகளுக்கு வெளியூர்களிலிருந்து பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் அனைத்தும், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும்.

அனுமதிக்கப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் மருந்தகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி உண்டு.

உணவு டெலிவரி செய்யும் Swiggy, Zomato, uber eats போன்ற நிறுவனங்கள் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், பிறகு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

இப்படியாகப் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் யாவும், நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும், இதனை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.