ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 2 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, மத்திய அரசு தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

- ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து, மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் அந்த விதிமுறைகள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

- நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைவரும் சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளைத் தொடரலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- அதேபோல் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

- ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

- ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

- மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் குறித்து மத்திய அரசு, தமிழக தலைமைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையில், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிடோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் மோடி தலைமையில் இன்று இரவு மத்திய அமைச்சரவை கூடி, முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.