சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய டாக்டர் கைது செய்யப்பட்டார்.

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் தங்கி பணியாற்றி வந்த 28 வயது இளம் பெண் ஒருவர், மூல வியாதியால் கடும் அவதிப்பட்டு வந்தார். மூல வியாதி முற்றிய நிலையில், அருகில் உள்ள ஆண் டாக்டர் வன்ஸ்ராஜ் திவிவேதியை சந்தித்து, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் அவருக்கு வலி தாங்க முடியாமல், சிகிச்சைக்காக க்ளினிக்கில் வந்து டாக்டரை பார்த்துள்ளார். அப்போது, அந்த இளம் பெண்ணுக்கு மயக்க ஊசிபோட்டு, இங்கேயே தூங்கச் சொல்லி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, அந்த இளம் பெண்ணும் சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே தூங்கிவிட்டு, பிறகு வீடு திரும்பி உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ அனுப்பி உள்ளார். அதில், அந்த பெண்ணின் ஆடைகளைக் கலைத்து, அந்த பெண்ணை மயக்க நிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்து, அதை, வீடியோவாக எடுத்துள்ளது தெரியவந்தது. அதைப் பார்த்த அந்த இளம் பெண், கடும் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சண்டைபோட நேரில் சென்ற அந்த பெண்ணை, மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இது போன்று தான் ஆசைப்படும் போதெல்லாம், தன் பாலியல் இச்சைக்கு, அந்த பெண்ணை மிரட்டியே பணியவைத்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரங்கேறிய இந்த சம்பவத்தில், 2018 ஆம் ஆண்டு அந்த பெண் உடல் நலம் தேறி திருமணம் செய்துகொண்டு, தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட அந்த டாக்டர், மீண்டும் அந்த பெண்ணை, தனது பாலியல் இச்சைக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுக்கவே, அந்த ஆபாச வீடியோவை அந்த பெண்ணின் கணவருக்கே அனுப்பி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது கணவர் இது குறித்து, அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டபோது, அவர் அழுதுகொண்டே நடந்ததையெல்லாம் கூறி உள்ளார்.

இதனையடுத்து கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீார், பாலியல் பலாத்காரம் செய்த 58 வயது டாக்டரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.