இனி குற்றங்கள் திடீரென அதிகரிக்கலாம் என்று தமிழக காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

அதே நேரத்தில், கொரோனா ஊரடங்கான இந்த நேரத்தில் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், சென்னை பெருநகரக் காவல் துறையின் எம்.கே.பி.நகர் சரக உதவி ஆணையர் ஹரி குமார், காவல் துறை தரப்பில் சில முன் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

அதன்படி, “தமிழகத்தில் வேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, பண நடமாட்டம் குறைவு காரணமாகப் பழைய குற்றவாளிகள் அல்லது புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், குற்றச் சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்” என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, “பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள், வேலை செய்யும் பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பு மக்களும் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.

“வெளியே செல்லும் பொதுமக்கள் விலை உயர்ந்த கைக் கடிகாரங்களை அணிய வேண்டாம்” என்றும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“விலை உயர்ந்த ஜெயின், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் என்றும், உங்கள் கைப் பைகளில் கவனமாக இருங்கள்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், “விலை உயர்ந்த செல்போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம். பொது வெளியில் குறைக்க முயற்சிக்க வேண்டும்” என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

“வாகனங்களில் முன் பின் தெரியாத அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக “தேவையான பணத்தை விட அதிகமாக யாரும் எடுத்துச் செல்ல வேண்டாம்” என்றும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மனைவி மற்றும் குழந்தைகளின் நலனைச் சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு ஆண்கள் போன் செய்ய வேண்டும் என்றும், வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வீட்டில் உள்ளவர்கள் வைத்திருங்க வேண்டாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பள்ளி முடிந்ததும் குழந்தைகளைச் சீக்கிரம் வீடு திரும்புமாறு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் பலரும் எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருக்க வேண்டும்” என்றும், கூறப்பட்டுள்ளது.

மேலும், “பொது வெளியில் செல்வோர் எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் செல்ல வேண்டாம் என்றும், முடிந்த வகையில் மெயின் சாலையில் செல்ல வேண்டும்” என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன், “ உங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும் போது காலையில் 6 மணியளவில் தொடங்கி, இரவு அதிகபட்சமாக 8 மணிக்குள் வீடு திரும்பும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்” உதவி ஆணையர் ஹரி குமார், அறிவுறுத்தி உள்ளார்.

இந்த விதிமுறைகளைக் குறைந்தது அடுத்த 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை சரியாகும் வரை நாம் அனைவரும் அவசியம் பின் பற்றப்பட வேண்டும்” என்றும், சென்னை பெருநகரக் காவல் துறையின் எம்.கே.பி.நகர் சரக உதவி ஆணையர் ஹரி குமார், எச்சரிக்கை விடுத்துள்ளார்.