காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழக விவசாயிகள் பெரிதும் நம்பியிருந்த காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக காவிரி டெல்டாவுக்கு மேட்டூர் அணையைத் திறந்து வைத்த பின், முதலமைச்சர் பழனிசாமி காவிரியை வணங்கி நீரில் மலரைத் தூவினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “நீர் திறப்பால் 12 டெல்டா மாவட்டங்களில் 4.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

“கடைமடை வரை மேட்டூர் அணையின் நீர் சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இதனை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

மேலும், “மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும் என்றும், இதன் மூலம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன என்றும், உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக” குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, “குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.

குறிப்பாக, “முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.