தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலத்தில் 441 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட, 7.8 கி.மீ நீளமுள்ள பிரமாண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ இந்தியாவிலேயே கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளதாக” குறிப்பிட்டார்.

 Corona has not become socially widespread in TN - CM Palanisamy

அதேநேரத்தில், “கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது என்றும், பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அப்போது, “கொரோனா உயிரிழப்பு விசயத்தில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர், “கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது” என்றும் கூறினார்.

மேலும், “புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன” என்றும்,  முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “உயிரிழப்புகளை மறைப்பதால் தமிழக அரசுக்கு என்ன பயன் உள்ளது?” என்றும் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடையே கேள்வி எழுப்பினார்.

 Corona has not become socially widespread in TN - CM Palanisamy

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை என்றும், அப்படி மாறியிருந்தால் இன்று நீங்களும் நானும் இங்கே நின்றுகொண்டிருக்க மாட்டோம்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, நாளை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, “குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.