தமிழகம் முழுவதும் உள்ள ஊர் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது “தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும்” என்று அறிவித்தார். அத்துடன், “இந்த திட்டத்தினை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

TNGovt to Change English Pronunciation 1018 Cities

அதன் தொடக்கமாக, மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரையின் அடிப்படையில், தற்போது முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களில் தமிழ் உச்சரிப்பிலிருந்து ஆங்கில உச்சரிப்பில் வேறுபாடு உடைய பெயர்களில் திருத்தம் செய்து, தமிழக அரசு தற்போது புதிதாக அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, “திருவல்லிக்கேணி” என்பதை ஆங்கிலத்தில் “Triplicane” என்று உச்சரித்து வந்த நிலையில், இனி அதை “Thiruvallikkeni” என்று உச்சரிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், இனி "Egmore" என்பது ஆங்கிலத்தில் "Ezhumboor" ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. “தண்டையார்பேட்டை” என்பதை “Tondiyarpet“ என்பதற்குப் பதிலாக இனி “Thandaiyaarpettai” என்றே திருத்தி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னையின் பல பகுதியின் பெயர்களோடு காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், விழுப்புரம், சேலம், வேலூர், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,018 ஊர் பெயர்களிலும் அதிரடியாகத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

TNGovt to Change English Pronunciation 1018 Cities

அதன்படி சென்னையில் உள்ள வ.உ.சி நகர் - V.O.C Nagar - VA.OO.SI Nagar என்றும், பூவிருந்தவல்லி - Poonamallee - Poovirunthavalli என்றும், தாராபுரம் வடக்கு - Dharapuram North - Tharaapuram Vadakku என்றும் மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு - Chengalpet - Chengalpattu  என்றும், 
விழுப்புரம் - Vilupuram - Vizhuppuram  என்றும், 
ஆரணி - Arni - Aarani  என்றும், 
வேலூர் - Vellore - Veeloor  என்றும், 
தூத்துக்குடி - Tuticorin - Thooththukkudi என்றும், 
நாகர்கோயில் - Nagercoil - Nagerkovil  என்றும், 
சிவகங்கை - Sivaganga - Sivagangai என்றும், 
தருமபுரி - Dharmapuri - Tharumapuri என்றும், 
திருவைகுண்டம் - Srivaikundam - Thiruvaikundam  என்றும், 
திருவில்லிபுத்தூர் - Srivilliputtur - Thiruvillipuththur  என்றும், 
கோயம்புத்தூர் - Coimbatore - Koyampuththoor  என்றும், 
கரூர் - Karur - Karoor  என்றும், 
மதுரை - Madurai - Mathurai  என்றும், 
திண்டுக்கல் - Dindigal - Thindukkal  என்றும், 
சீர்காழி - Sirkali - Seerkaazhi  என்றும், 
திருவரங்கம் - Srirangam - Thiruvarangam  என்றும், ஊர் பெயர்கள் மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், மதுரை உள்ளிட்ட ஊர் பெயர்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே பெயரில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.