கொரோனா அளவுக்கு, மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது தமிழக அரசின் `ஆங்கில ஊர்ப் பெயர்கள் மாற்றல்' விவகாரம். ஒரே நாளில், அதுவும் இரவு நேரத்தில் ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட ஊர்களுக்குப் பெயரை மாற்றி, புதிய அறிக்கையை வெளியிட்டு, `இனி இப்படித்தான்' என ஆணை பிறப்பித்துள்ளது அரசு. 

தமிழ் வளர்ச்சித்துறைக்கான அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். சரியான தமிழ் உச்சரிப்பு வரவேண்டும் என்பதற்காக, இதைத் தான் செய்துள்ளதாகச் சொல்லியிருக்கிறார் அமைச்சர். இந்த பணிக்காக, ஏறத்தாழ 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாம். தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஊர்ப்பெயர்களிலிருந்து ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ரித சொற்களையெல்லாம் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள், நம் அதிகாரிகள். உதாரணத்துக்கு, இனி ஶ்ரீரங்கம் - திருவரங்கமாம்!

2018-19 ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானிய கோரிக்கையில், தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றம் செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, முன்னறிவிப்பு ஏதுமன்றி, அவசர அவசரமாக இதை இப்போது செய்யப்பட வேண்டியது ஏன் என்ற கேள்வி, பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி அரசுப் பணியாளர்கள் சிலரிடம் கேட்டபோது, `இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு. இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான்' என்கின்றார்கள் அசால்ட்டாக. நெட்டிசன்கள் பலரும், `உலகமே கொரோனா கூட போராடிட்டு இருக்கும்போது, இவங்க மட்டும் ஊர் பேரை மாத்தி விளையாண்டுட்டு இருக்காங்க எசமான்' என மீம்ஸூம் ஸ்டேட்டஸூம் போட்டுக்கொண்டிருக்காங்க!

இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவென்பதால், அப்போதிருந்தே ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கு கீழும் ஒவ்வொரு நபர் நியமிக்கப்பட்டு, இந்த மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருந்திருக்கின்றனராம். அவர்களின் பரிந்துரைக்கேற்ப, தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெயர் மாற்றிய பட்டியலோடு சேர்த்து, அனைத்து மாவட்ட நிர்வாகிகள் - கிராம நிர்வாக ஊழியர்கள் - ஊரக வளர்ச்சி பணியாளர்கள் என அனைவரும் தங்களது அலுவலகம் வழியாகத் தத்தமது ஊர்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இனி தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஆவணத்திலும், பெயர் மாற்றப்பற்றிருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையால் கோயம்புத்தூர், வேலூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களின் ஆங்கிலப் பெயர்கள்கூட எழுத்தளவில் மாறியிருக்கின்றன. அதாவது, Coimbatore தற்போது Koyampuththoor எனவும், Vellore என்பது Veeloor, Madurai என்பது Mathuraiஎனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பெயர்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றாலும், சென்னையில் உள்ள பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்கள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊர்களின் பெயர் மாற்றம் இப்போது மட்டும் வந்தது அல்ல. பிரிட்டிஷ் காலத்திலிருந்தே மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக,  சென்னை, மதராஸ் பிரசிடென்சி என்பதிலிருந்து, மதராஸ் பட்டணமாகவும், பின்னர் சென்னைப் பட்டணமாகவும் மாறியது. இதனையடுத்து 1996 ஆண்டு அப்போதைய முதலமைச்சரான மு. கருணாநிதியால் மெட்ராஸ் என்ற பெயரானது சென்னை என்றும் மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில், ஆங்கிலேயர்கள் தங்களின் உச்சரிப்பிற்கேற்றவாறு தமிழ் ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றி அமைத்துக் கொண்டனர். இதனால் தமிழில் ஒரு பெயரும், ஆங்கிலத்தில் வேறு ஒரு பெயருமே இருந்து வந்தன. தற்போது இந்த அறிவிப்பினால், தமிழ்ப்பெயர்கள் இனி தமிழிலேயே அழைக்கப்படும். 

2018 - 19 ம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டிருந்த சட்டமாக இருந்தாலும், நோய்த்தொற்று அபாயமிருக்கும் இந்தச் சூழலில், இப்போ இவ்வளவு அவசரமா இதை அரசு ஏன் அமல்படுத்த வேண்டுமெனச் செயற்பாட்டாளர்கள் கேட்டுகிட்டே இருக்காங்க.  ஊர்களின் பெயர்களை மாற்றினால் மட்டும் கொரோனாவில் இருந்து நாம் விடுப்பட்டுவிடுவோமா?  இந்த சூழ்நிலையில் ஊர்களின் பெயர் மாற்றம் அவசியம் தானா எனப் பலரும் சமூக ஊடகங்களில் பேசி வந்தாலும், இதனைத் தமிழ் ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

நம்ம மாநிலத்தின் பெயர்களை மட்டுமில்லாமல், புதுச்சேரியின் ஆங்கில உச்சரிப்பையும் மாற்றியுள்ளது தமிழக அரசு. ஆனா பாருங்க... தமிழ்நாடு என்பதன் ஆங்கில வடிவத்தை மட்டும் மாற்றாமல் விட்டுடாங்க. ஒருவேளை தெரியாமல்தான் செய்திருந்தார்கள் என்றால், அதையும் விரைவில் மாற்றிவிடக்கூடும்.