கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் தொடரலாம் என்று பிரதமர் மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “நாட்டில் கொரோனாவை வெற்றிகரமாகக் கையாண்டதற்காக, சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக” புகழாரம் சூட்டினார்.

“கொரோனா தடுப்பு விவகாரத்தில், மாநில அரசுகளின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று பேசிய பிரதமர் மோடி, ஊரகப்பகுதிகள் கொரோனா பாதிப்பிலிருந்து விலகி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

”நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், வரும் காலங்களில் பொருளாதாரத்தை உத்வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநில முதலமைச்சர்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, “தனிமனித இடைவெளியைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை, அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக புதிய விதிமுறைகளை வரும் 15 ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

மேலும், முதல் மற்றும் 2 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் தற்போது பொருந்தாது என்றும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தற்போது வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதனால், நாடு முழுவதும் 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.