ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், தமிழகத்தில் வேகமாகப் பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே 3 ஆம் தேதி வரை 40 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றாடம் வேலைக்குச் செல்லும் கூலி தொழிலாளர்கள், சாப்பிடக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாகத் தமிழக அரசியலில் சூடான எதிர் எதிர் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, கொரோனா காலத்தில் அம்மா உணவகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, “தமிழக அரசு உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “ஊரடங்கு காரணமாக, மக்களின் நலன் கருதியும், சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களிலும் இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை, தினம் 3 வேளையும் இலவச உணவு வழங்க வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“இலவச உணவு வழங்குவதற்கு ஆன செலவை, இலவச உணவு வழங்கக் கோரிய தன்னார்வலர்களிடம், அம்மா உணவகத்தில் பணிபுரியும் சுய உதவிக் குழுக்கள் பெற்று, வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.