கொரோனா காலத்தில், தமிழகத்தில் சில அத்திவாசிய மற்றும் அடிப்படையான தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாக, தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரசால், 2 வது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், 21 நாட்களாக இருந்த ஊரடங்கு தற்போது 40 நாட்களாக நடைமுறையில் உள்ளது.

Tamil Nadu CM meeting with industrialists

இதனிடையே, கடந்த 20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட விசயங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கொரோனா வீரியத்துடன் பரவி வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் வழக்கம் போல் தொடரும் என்றும், மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் தமிழகத்தில் கிடையாது என்றும் தமிழக அரசு அறிவித்தது.

மேலும், 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதன் பிறகும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சில அத்திவாசிய மற்றும் அடிப்படையான தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாக, தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Tamil Nadu CM meeting with industrialists

இதில், கொரோனா பரவாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில், சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தொழில் ரீதியாக சில தளர்வுகள் தமிழகத்தில் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 

அத்துடன், குஜராத்தில் பாதுகாப்புப் பணியில் இருப்பதால், தமிழகத்தில் தன் வீட்டில் தனியாக இருக்கும் என் தாயாருக்கு மருத்துவ உதவிகள் தேவை எனப் பாதுகாப்புப் படை வீரர் ரவிக்குமார், டிவிட்டரில் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, பாதுகாப்புப் படை வீரரின் கோரிக்கைக்கு முதலமைச்சர் பழனிசாமி, உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் அளித்துள்ள பதிலில், “தங்கள் தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்” என்று முதலமைச்சர் பழனிசாமி டிவிட் செய்துள்ளார். தற்போது முதலமைச்சரின் இந்த டிவிட், வைரலாகி வருகிறது.