இன்ஸ்பெக்டர் மீது, பெண் சப் இன்ஸ்பெக்டர் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த வாழ்க்கையில் எந்த யோக்கிதையும் இல்லாமல் வாழும் போலீசார், பிரச்சனை என்று வருபவர்களிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தீர்வு சொல்வார்கள். அதன் அடிப்படையில் நியாயத்தைப் பறைசாற்றுவார்கள்?

சமூகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீசார், பொதுமக்களுக்கு முன் உதாரணமாகத் திகழும் வகையில் தான், தனிப்பட்ட முறையில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், வேலியே பயிரை மேய்ந்தால்? அதன் விளைவுகள் சமூகத்தில் மிகப் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சாகரில் உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர், அங்குள்ள முசாபர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “காசியாபாத் ஆயுதப்படையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சந்தீப் சவுகான், என்னை விரும்பியதாகவும், இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு” எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்படி, “இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, திருமணத்திற்கு முன்பாக, அவர் வீட்டிற்குச் சென்றபோது, அவர் ஆசை வார்த்தைகள் கூறி, என்னைப் பலாத்காரம் செய்துவிட்டார்.

பின்னர், திருமணத்திற்கு ஒரு கார் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறி, என்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்” என்றும் புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முசாபர் நகர் போலீசார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, ஆண் இன்ஸ்பெக்டர் மீது, பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.