பணியிலிருந்த சப்இன்ஸ்பெக்டர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லையான களியக்காவிளை அருகில் உள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் 55 வயதான வில்சன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கேரளாவிலிருந்து கன்னியாகுமரி சாலையில் காரை அவர் சோதனை செய்வதற்காக நிறுத்தினார்.

அந்த நேரத்தில், காரிலிருந்து சர சர வென்று இறங்கிய மர்ம நபர், திடீரென்று துப்பாக்கியை எடுத்து, வில்சன் மீது சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில், 3 முறை, வில்சன் மீது குண்டு பாய்ந்தது. பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர், தான் வந்த அதே காரிலேயே தப்பிச் சென்றுவிட்டார்.

இதில், வில்சனுக்கு மார்பு, வயிறு, இடுப்பு என .3 இடங்களிலும் குண்டு பாய்ந்து, ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. இதனால், பதறிப்போன சக போலீசார், அவரை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சியின் மூலம் மர்ம நபர்கள் குறித்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும், தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 3 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்குப் பலிவாங்கும் நோக்கில், மாவோயிஸ்ட்டுகள் வில்சனை சுட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.