அரசு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் 900 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகக் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட மாநிலங்களின் பட்டியலில் 2 இடம் பிடித்தது. தற்போது, கொரோனா வைரஸ் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்தியக் குழு ஒன்று சென்னை வந்துள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து, அந்த குழு ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் முகாம்களில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதர வேண்டும் என்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

அதே நேரத்தில், பால் மற்றும் பால் பொருட்களை வீடு தேடிச் சென்று விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம், Zomato மற்றும் DUNZO நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்படி, நேற்று (24.4.2020) முதல், ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் நுகர்வோர்களின் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 900 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை, 3 ஆண்டுகளுக்குத் தற்காலிக பணி நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள் மற்றம் செவிலியர்கள் அனைவருக்கும் 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மேலும், தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்குப் பணி ஆணை கிடைத்தவுடன், பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவர் சைமனின் உடலை மறு அடக்கம் செய்யுமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்த நிலையில், அந்த கோரிக்கையைச் சென்னை மாநகராட்சி நிராகரித்துள்ளது.

குறிப்பாக, கொரோனா நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்த பின், மீண்டும் வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,12,282 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 2,65,756 வாகனங்கள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3.13 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.