கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதற்குப் பதிலாக ஆல்கஹாலை பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காமல், உலக நாடுகள் எல்லாம் திணறி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கும் படி நாட்டு மக்களுக்கு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.

இதனால், ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி, சோப்பு பவுடர் மற்றும் பீச்சிங் பவுடர் உள்ளிட்டவை கிருமி நாசினிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோப்பு

மற்றும் பீச்சிங் பவுடர் கலந்து; ஊர்கள் தோறும், சாலைகள் தோறும் தெளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும், மஞ்சள் கலந்த நீர், வேப்பிளை, மாட்டு சானம் உள்ளிட்டவை வீட்டு வாசலில் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதால், உலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இப்படியாக ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 70 முதல் 80 சதவீத ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. சில கிருமி நாசினியில் மட்டும் 40 சதவீத ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி, உலகம் முழுவதும் சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி பயன்படுத்தப்படுவதால், உலகம் முழுவதும் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால், கிருமி நாசினிக்குப் பதிலாக ஆல்கஹாலையே நேரடியாகப் பயன்படுத்த, ஜப்பான் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மதுபானங்களில் ஒருவகையான வோட்காவை கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம் என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.

கிருமி நாசினியை விட நேரடியாகப் பயன்படுத்தப்படும் வோட்காவுக்கு, வீரியம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, வோட்காவை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட, அதனைத் தண்ணீருடன் கலந்து, கைகளை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று, ஜப்பான் அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது.