கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 15 வரை ஐ.பி.எல்.லில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

13 வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர், வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையி், சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 97 உலக நாடுகளுக்குப் பரவி உள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து உள்ளது.

இதனால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில், முக்கிய நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 வரை, மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்தியாவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, வரும் 29 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 15 வரை, ஐ.பி.எல்.லில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், வரும் 14 ஆம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூட்டத்தில், ஐ.பி.எல். போட்டிகளை குறிப்பிட்ட 29 ஆம் தேதியே தொடங்கலாமா? அல்லது மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.