கொரோனாவால் சூழ்ந்த இருளை அகற்றும் வகையில், நாடு முழுவதும் இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றியதால், இந்தியா தீப ஒளியால் ஜொலித்தது.

இந்தியாவில் கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, கொரோனாவுக்க எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தங்களது மகா சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி, நாட்டு மக்கள் அனைவரும் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு, அனைவரும் வீடுகளில் எரியும் மின் விளக்குகளை அணைத்து விட்டு, வாசலில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்று, நேற்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும், தங்களது வீட்டு வாசலில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்களுக்கு நின்றனர். அடுக்கு மாடியில் குடியிருப்பவர்கள் பால்கனியில் நின்றபடி ஒளியேற்றினர். இதனால், கொரோனாவுக்க எதிராக இந்தியா தீப ஒளியால் ஜொலித்தது.

அதன்படி, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தீப ஒளி ஏற்றினார். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினருடன் தீப ஒளி ஏற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, தனது இல்லத்தில் மிகப் பெரிய அளவிலான குத்துவிளக்கை ஏற்றி ஒளிரச் செய்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆளுநர் மாளிகையில் சக அதிகாரிகளுடன் தீப ஒளி ஏற்றினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது குடும்பத்தினருடன் சமூக இடைவெளி விட்டு தீபம் ஏற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது குடும்பத்தினருடன் வீட்டில் விளக்குகளை ஏற்றி ஒளிரச் செய்தார்.

அதேபோல், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் ஒளியை ஏற்றி கொரோனாவுக்கு எதிராக தங்களது ஒற்றுமையையும், மத்திய - மாநில அரசுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் தங்களது மகா சக்தியை வெளிப்படுத்தினர். இதனால், இந்தியாவே தீப ஒளியால் ஒளிர்ந்தது. வீடுகள் தோறும் ஒளி வெள்ளம் பாய்ந்தது.