எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எந்தெந்த தலைவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்திய பகுதிக்கு உட்பட்ட லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற பயங்கர மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில், இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக ஆலோசிக்கவும், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசி முடிவு எடுக்கவும் பிரதமர் மோடி தலைமையில், காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழையவில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்திய - சீன ராணுவ வீரர்களின் மோதலின்போது, இந்திய நிலைகள் எதையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை என்றும், இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும்” பிரதமர் மோடி கூறினார்.

அத்துடன், “எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் நமது ராணுவத்திற்கு இருப்பதாக” குறிப்பிட்ட பிரதமர் மோடி, “புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிலைகளால், இந்திய ராணுவத்தின் கண்காணிக்கும் திறன் கூடியிருப்பதாகவும்” சுட்டிக்காட்டினார்.

“ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நமது ஆயுதப்படைகளுக்கு உள்ளது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குறிப்பாக, “இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என்றும், எந்த நடவடிக்கைக்கும் நமது ராணுவம் தயாராக இருப்பதாகவும்” பிரதமர் மோடி சூளுரைத்தார்.


இதனைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “இந்த கூட்டத்தை முன்கூட்டியே கூட்டியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“இந்திய எல்லைக்குள் சீன படைகள் நுழைந்தது எப்போது?” என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “இந்திய அரசின் வெளியுறவு நுண் பிரிவு என்ன செய்து கொண்டு இருக்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நிற்போம்” என்றும் சோனியா காந்தி உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்றைய தினம் வரை அந்த பகுதியில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு” பிரதமர் மோடியை சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.


சீன பிரச்சனை தொடர்பாகத் தொடர்ந்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், “இது மிக அவசியமான கூட்டம்” என்று குறிப்பிட்டார்.

“தேசத்தையும், தேசத்தின் எல்லைகளையும் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு இது” என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் போர் நடவடிக்கைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த நகைகள் வழங்கியதையும்” ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்தார்.

அத்துடன், “நெருக்கடியான நிலையைப் பிரதமர் புத்திசாலித்தனத்துடனும், உறுதியுடனும் கையாள்வதாக” ஓ.பன்னீர்செல்வம் பெருமையோடு பாராட்டினார்.

“எதிரிகளின் எந்த முயற்சியையும் நிச்சயம் வெல்வோம் என்றும், நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுத்தர மாட்டோம்” என்று ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்தார்.

இதனையடுத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கப் பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும்” என்று குறிப்பிட்டார்.

“நாட்டுக்காகப் போர் வீரர்கள் செய்த தியாகம் ஒருபோதும் வீணாகாது என்றும், இந்தியாவின் எல்லையைப் பாதுகாத்திட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை” என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

“சீனப் போர், பாகிஸ்தான் போர் மற்றும் கார்கில் போரில் திமுக எப்போதும் அரசின் பக்கம் நின்று இருக்கிறது” என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “இந்தியா அமைதியை விரும்புகிறது என்றும், தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்” என பிரதமர் மோடி கூறியதை ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார்.

“நாட்டு நலன் சார்ந்த அரசின் நடவடிக்கைகளுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்றும், போர் குரல் ஒலிக்கும் போது பின்வாங்க மாட்டோம்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.