சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பலரும் சொந்த ஊர் திரும்ப குடும்பம் குடும்பமாகப் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் தீவிரமாகப் பரவத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, வரும் 30 ஆம் தேதி வரை 5 வது முறையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றை நீக்கி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Families leaving Chennai due to coronavirus lockdown

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல், வரும் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த மக்கள், கடந்த சில மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது, தலைநகர் சென்னையில் கொரோனா என்னும் கொடிய வைரஸ், கோரத் தாண்டவம் ஆடி வருவதால், உயிர் பயத்திலும், வாழ்வாதாரத்தைத் தேடியும் மீண்டும் சொந்த ஊர்களுக்கே பொதுமக்கள் திரும்பத் தொடங்கி உள்ளனர்.

சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்கு அனுமதி சீட்டு வழங்குவதற்கான காவல் கட்டுப்பாட்டு அறையானது, துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் இயங்கி வருகிறது. அங்கு திருமணம், இறப்பு, மருத்துவ அவசர தேவைகள் ஆகிய 3 காரணங்களுக்காக மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் நேற்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக நீண்ட வரிசையில் குவியத் தொடங்கினர். இதில் நேற்று மட்டும் 6000 நபர்கள் வெளியூர் செல்வதற்காக விண்ணப்பித்து இருந்தனர். 

Families leaving Chennai due to coronavirus lockdown

இதனைத்தொடர்ந்து, இன்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக, அனுமதி சீட்டு வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாகக் கடந்த 2 நாட்களில் சுமார் 8500 பேர் வெளியூர் செல்வதற்காகச் சென்னை காவல் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இவர்களில் இதுவரை 114  பேருக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்காக அனுமதி சீட்டு கிடைக்காத நிலையில், பலரும் வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். 

ஏராளமான மக்கள் தங்களது இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலேயே சொந்த ஊர் நோக்கிப் பயணப்படத் தொடங்கி உள்ளனர்.

இதனால், காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, பரனூர் சுங்கச் சாவடியை நோக்கிச் செல்வோரைத் திருப்பி அனுப்பும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இ பாஸ் உள்ளவர்கள் மட்டுமே சுங்கச் சாவடி வழியே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Families leaving Chennai due to coronavirus lockdown

உரிய அனுமதி பெறாமலும் இ பாஸ்கள் இன்றியும் சென்னையை விட்டு வெளியேற முயன்ற ஏராளமான வாகனங்களையும் காவல் துறையினர் அடுத்தடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர். 

குறிப்பாக, சென்னையில் வண்டலூர் உட்பட பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே அவர்களை வெளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மற்றவர்களை சென்னைக்கே போலீசார் திருப்பி அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். 

மேலும் சிலர், தனது குடும்பத்தினருடன் நடந்தே ஊர் திரும்பும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இவர்களில் பலரை போலீசார் எச்சரித்து மீண்டும் சென்னைக்கே அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னையிலிருந்து வெளியூர் திரும்ப நினைப்போர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.