கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே சுட்டுக்கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்போத்தன்குட்டையைச் சேர்ந்த 53 வயதான கோவிந்தராஜ், வீட்டிலேயே டெய்லர் கடை நடத்தி, ஆர்டர் எடுத்து ஆடைகள் தைத்துக் கொடுத்து வந்தார்.

கோவிந்தராஜின் மனைவி காஞ்சனாவுக்கு 38 வயது என்பதால், கணவன் - மனைவி இடையே 15 வயது வித்தியாசம் இருந்துள்ளது. ஆனாலும், இவர்களுக்கு 4 மகள்கள் உள்ள நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

இதனிடையே, கோவிந்தராஜ் புதிதாக வீடு கட்டி உள்ளார். அப்போது, ஜோலார்பேட்டை அருகில் உள்ள சின்ன மூக்கனுாரைச் சேர்ந்த 30 வயதான குப்புசாமி, அங்கு மேஸ்திரியாக வேலை பார்த்துள்ளார்.

வீடு கட்டும் போது குப்புசாமிக்கும் - காஞ்சனாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

மேலும், மதுவுக்கு அடிமையான கோவிந்தராஜ், தினமும் குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டைபோடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால், பொருத்து பொருத்து பார்த்த அவரது மனைவி, கணவனின் தொல்லை தாங்காமலும், தனது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பதாலும், தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்த கணவனை கொலை செய்யத் திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி, கள்ளக்காதலன் குப்புசாமி யாரிடமோ நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி இரவு நன்றாக குடித்திருந்த கோவிந்தராஜ், தள்ளாடி தள்ளாடி வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரை பின்னாடியே தொடர்ந்து வந்த கள்ளக்காதலன் குப்புசாமி, தனது நாட்டுத் துப்பாக்கியால் கோவிந்தராஜை தலையில் சுட்டுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தாலும், சிறிது அளவுக்கு நினைவு இருந்ததால், தன் மனைவிக்கு போன் செய்து “நான் கீழே விழுந்துவிட்டேன். என்னைக் காப்பாற்று” என தனது மனைவி காஞ்சனாவிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, திருப்பத்துார் மற்றும் வேலுார் அரசு மருத்துவமனைகளில் ஆரம்பக் கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அவர் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனையடுத்து, அங்கிருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கோவிந்தராஜின் பின்னந்தலை மற்றும் முதுகில், சின்ன சின்ன குண்டுகள் இருந்தது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 15 ஆம் தேதி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவிந்தராஜின் மனைவி காஞ்சனாவிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலன் குப்புசாமியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, காஞ்சனா மற்றும் கள்ளக்காதலன் குப்புசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து செய்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கள்ளக்காதலனை விட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.