காவல்நிலையம் எதிரில் செயல்பட்ட மதுபான கடைக்குத் தனி ஆளாகச் சென்று, இளம் பெண் ஒருவர் பூட்டுப் போட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் தமிழக அரசின் மதுபான கடைகள், குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலான அளவில் கடைகள் திறந்து வைக்கப்பட்டு, விற்பனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக, தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கலைச்செல்வி, தனது ஃபேஸ்புக்கலில் நேரலையில் வீடியோவை ஒளிபரப்பு செய்தவாறே, இரவு 10 மணிக்கு மேல் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று, கடை ஊழியர்களிடம் கடையை மூடும்படி வாக்குவாதம் செய்தார்.

அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்ட சுமார் 5 கடைகள் மூடப்பட்டன. இதனையடுத்து, சென்னை பட்டாபிராம் காவல் நிலையம் எதிரியிலேயே செயல்பட்டு வந்த மதுபானக் கடையை, மூடும்படி கடையின் ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கடையை மூட மறுத்துவிட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த கலைச்செல்வி, டாஸ்மாக் கடையின் வெளிக்கதவை மூடி, பூட்டு போட்டார். இதனைத்தொடர்ந்து, அதன் சாவியை, எதிரில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து, கூடுதல் நேரத்திற்கு மதுபானம் விற்ற ஊழியர்கள் மீது புகார் அளித்தார்.

“கூடுதல் நேரத்திற்கு மது கடை திறந்திருப்பதால், குடிப்பவர்கள் அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக இதனால் கெட்டுப்போவதாகவும் குறிப்பிட்டார். இதன் காரணமாக, சட்டத்திற்குப் புறம்பாகக் கூடுதலாக மதுக்கடையைத் திறந்து வைத்து, மது விற்பனை செய்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்றும், அந்த பெண் வலியுறுத்தினார்.

அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துக்கொண்டிருக்கும்போது, கடைக்குள் இருந்த குடிமகன்கள் பலர், பூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்தனர். இதனால், பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே பரபரப்பு ஏற்பட்டது.