தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் இன்றுக்குள் கருத்துக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 5 வது முறையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களைக் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதனால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து மெட்ரிக் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு நர்சரி பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என 8 வகையான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த பள்ளிகளைச் சேர்ந்த தலா ஒரு பெற்றோரை தேர்வு செய்து, அவர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மதியம் 12 மணிக்குள் கருத்து கேட்டு, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொது முடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பெற்றோர்களின் விவரங்களைப் பெற்ற பிறகு மாவட்ட வாரியாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.