அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

New Cyclone to South West Monsoon in Kerala
 
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி இருக்கும் நிலையில், அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவாவிற்கு தென்மேற்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் சூரத்துக்கு தென்மேற்கே 920 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளது.

மேலும், “அடுத்த சில மணி நேரங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் 24 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் வலுப்பெறும்” என்றும் கூறியுள்ளது.

New Cyclone to South West Monsoon in Kerala

குறிப்பாக, “வரும் ஜூன் 3 ஆம் தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு இடையே, இந்த புயல் கரையைக் கடக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, “வடக்கு மகாராஷ்டிரா கோவா மற்றும் தெற்கு குஜராத்தின் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை” கொடுக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் புயல் காரணமாக, “கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்னாகுளம், இடுக்கி, மலப்புரம், கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை” விடுத்துள்ளது.

அதேபோல், “நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாக இருக்கும் என்றும்” சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

தென் மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம், திருவட்டார், திற்பரப்பு, பேச்சிப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.  

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேசிப்பாறை, சிற்றார், பெருஞ்சாணி போன்ற அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.