வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கம் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோரும், அரசு உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையில், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, மே 3 ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் பழனிசாமி சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதன்படி, “ தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்குப் பாராட்டு” தெரிவித்தார்.

“மாவட்ட ஆட்சியர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“அரசின் வழிமுறைகளைப் பின்பற்றினால், கொரோனாவை முழுமையாகத் தடுக்கலாம் என்றும், கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்றும், சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, “வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைப்பொருட்கள் கொண்டுசெல்வதை யாரும் தடுக்கக் கூடாது என்றும், அதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.