கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ சேர்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், எப்போது பள்ளி திறக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஈரோடு அருகே சித்தோடு கன்னிமார்க்காடு பகுதியில் ஜி.கே.மூப்பனாரின் 90ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர்
செங்கோட்டையன் நேற்று கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “ஆசிரியர் தகுதித் தேர்வை பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை தொடரும்” என்று கூறினார்.

எப்படியாகினும், இந்தியாவில் டிசம்பர் 2020 வரை பள்ளி திறப்புக்கு வாய்ப்பில்லை எனக்கூறி மத்திய அரசும் கூறியிருந்தது. இந்நிலையில், தமிழ்கத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் வளர்ச்சி பணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களை கூறியிருந்தார். குறிப்பாக,

* பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

* அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

* அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும்; தேவையின்றி வெளியே செல்லாதீர்.

* மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

* காய்ச்சல் முகாம்கள் காரணமாக, தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.

* கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

* முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

* இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான்.

* குடிமராமத்து பணிகள் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளன.

* தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

என்று அவர் கூறியிருந்தார்.

மற்றொரு பக்கம், அரசு சார்பாக பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படாததால், தற்போதைக்கு மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் வீடுகளுக்கேச் சென்று வழங்கப்படுகிறது. கடந்த மாதங்களில் இவை வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும்வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் வழங்க அரசாணையை நீட்டித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, கரோனா பாதிப்பு குறைந்து பள்ளிகள் திறக்கப்படும்வரை மாணவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.