சீனாவில் பூனை, நாய் இறைச்சி சாப்பிட அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து கொரேனா வைரஸ் பரவியதாகக் கூறப்படும் நிலையில், இன்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்குப் பரவி உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, சீனாவில் கொரோனா வைரஸ் பரவ காரணம், அந்நாட்டில் பூனை, நாய், பாம்பு, பூரான், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி உள்ளிட்ட அனைத்து விதமான விஷம் நிறைந்த ஊர்வன, நடப்பான ஆகியவற்றை உணவாக உண்பதுதான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கிலிருந்துதான் கொரோனா வைரஸ் மனிதர்களுக்குத் தொற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.

இதனிடையே, சீனாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், அங்குள்ள சந்தைகளில் இதே விலங்குகள் மீண்டும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் பரவி விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாய், பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும், அவற்றை உண்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெற்கு சீன தொழில்நுட்ப மையம், சீன அரசுக்கு கோரிக்கை வைத்தது.

இதனைப் பரிசீலனை செய்த சீனா அரசாங்கம், சீனாவில் நாய் மற்றும் பூனை உள்ளிட்ட இறைச்சிகளை விற்பதற்கும், உண்பதற்கும் அதிரடியாகத் தடை வித்துள்ளது.

அதே நேரத்தில் மீன், கோழி, கடல் உணவுகள், பன்றி, முயல் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகளை மக்கள் உண்ண சீன அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அங்கு இதுவரை 2800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.