உலகளவில் கொரோனா உயிரிழப்பு இன்னும் சில நாட்களில் 50 ஆயிரத்தை தாண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் முதன் முதலில் தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்குப் பரவி உலக மக்கள் யாவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Worldwide Corona death toll rises to 50 thousand!

தற்போது நிலவரப்படி, உலகளவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்து 35 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது. இதனால், உலக மக்கள் அனைவரும், எந்த நேரத்திலும் நம்மையும் கொரோனா வைரஸ் தாக்கக் கூடும் என்னும் பீதியில் உரைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் கெப்ரிசிஸ், “கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நிகழும் உயிரிழப்புகள், கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளதாக” கவலை தெரிவித்தார்.

“கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், அது இன்னும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும்” கவலை தெரிவித்தார்.

“குறிப்பாக, அடுத்த ஒரு சில நாட்களில் உலகளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை தொடும் என்றும், அதேபோல் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும்” என்றும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் கெப்ரிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.