டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், காவலர் ரத்தன்லால் உயிரிழந்த நிலையில், 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புரட்சித் தீ பற்றி எரிகிறது!

குறிப்பாக, கடந்த சில வாரங்கள் முன்பு வரை தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம், கடந்த சில நாட்களாகச் சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்ட தீ, மீண்டும் இன்று பற்றி எரிந்தது.

குறிப்பாக, டெல்லியின் பாஜன்புரா மவுஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதனால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

அங்கு சாலையில் நின்ற வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. அத்துடன், இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில், வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், காவலர் ரத்தன்லால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில், 144 தடை உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்துக்குள், அந்த பகுதியில் 2 வது முறையாக, இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோது, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் சுட்டில் 3 பேர் பலியான நிலையில், 44 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.