நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு, வரும் 22 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில், 5 பேர் கொண்ட கும்பலால் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரண வேதனை அனுபவித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பின்னர், தண்டனையைக் குறைக்கச் சொல்லி, குற்றவாளிகளில் ஒருவரான அக் ஷய் குமார் சிங், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்களது தண்டனையைக் குறைக்கச் சொல்லி “இந்து மத தத்துவங்களை” மேற்கொள் காட்டியிருந்தார்.

இதனையடுத்து, குற்றவாளிகளின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே,4 குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி, நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி, இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி, குற்றவாளிகள் 4 பேரும் வரும் 22 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. குறிப்பாக, 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு 4 குற்றவாளிகளும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.