உலகளவிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று தொடர்ந்து 2 வது நாளாக 2,000 பேர் உயிரிழந்துள்ள சம்பவம், அந்நாட்டையே உலுக்கி உள்ளது.

உலக வல்லரசில் தன்னை முதன்மைப் படுத்திக்கொள்ளும் அமெரிக்காவில், கட்டுக்கடங்காமல் கொரோனா என்னும் கொடிய வைரஸ், மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், அமெரிக்கா மிகப் பெரிய அளவில் தடுமாறி வருகிறது.

அமெரிக்காவில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் கிட்டத்தட்ட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து 2 வது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அமெரிக்காவில் பலி எண்ணிக்கை தற்போது 14,795 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,927 பேராக அதிகரித்துள்ளது. இதனால், செய்வதறியாது அமெரிக்கா திணறி வருகிறது.

மேலும், அமெரிக்காவில் சுமார் 23 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை மீண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அனுப்பும் பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பும் இந்தியாவையும், இந்திய மக்களையும் மறக்க மாட்டோம் என்றும் அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

முன்னதாக, ட்ரம்ப் இந்தியாவை மிரட்டும் தோணியில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மந்தை கேட்டது குறிப்பிடத்தக்கது.