தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் உடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்று வருகிறார். அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் அமித்ஷா முதலில் பேசினார். அதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி பேசி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி முதல்வர் பழனிசாமி, இந்த ஆலோசனையில் பங்கேற்ற வருகிறார். இதில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை இன்று மதியம் 12.30 மணிக்கு, மத்திய குழு சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்யத் தமிழகம் வந்துள்ள 5 பேர் கொண்ட மத்திய குழுவினர், இரண்டாம் நாளாக பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கோயம்பேடு காய்கறி சந்தை, விருகம்பாக்கம் காமராஜர் நகரில் அமைந்துள்ள அம்மா உணவகம், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். இதனையடுத்து, அவர்கள் இன்று தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தெற்குவாசல் காவல்நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. மதுரை பெருங்குடியைச் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அந்த காவலருடன் தொடர்பிலிருந்த 41 பேருக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், மதுரையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து சேலம் வந்தால், கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்றும், சேலம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.கொரோனா பரிசோதனையின் முடிவு வந்த பிறகே, மாநகர எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர் என புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளாக உள்ளவர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால், இன்று ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளதாகத் திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6 பேர், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகள் உட்பட மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 960 லிருந்து 1020 ஆக அதிகரித்துள்ளது.