இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில், தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி டெல்லி 2 வது இடத்திற்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி, நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதனால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், நாடு முழுவதும் 3 மண்டலங்களாகப் பிரித்து ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகளைத் தளர்த்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, இந்தியாவில் அதிகபட்சடாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது, அம்மாநில மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஊரடங்கின் 20 ஆம் நாளான இன்று, மும்பையில் 59 பேர் உட்பட மாநிலத்தில் புதிதாக 82 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2064 ஆக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 2 ஆயிரத்தைத் தாண்டிய முதல் மாநிலமாகத் திகழ்கிறது மகாராஷ்டிரா.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், நோய் தொற்றால் இன்று ஒருவர் அந்த பகுதியில் உயிரிழந்துள்ளார்

அதேபோல், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி டெல்லி 2 வது இடத்திற்கு வந்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 1154 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் இதுவரை 2 வது இடத்திலிருந்த தமிழகம், தற்போது 3 வது இடத்திற்குச் சென்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்ராவில் மட்டும் 134 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

குஜராத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் தற்போது வரை 815 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி உள்ளது.

நாகாலாந்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 32 மாநிலங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அங்கு 247ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 59 பேர் குணமடைந்துள்ளனர்.

இப்படியாக இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை 9373 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி, அதன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதேபோல், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் இதுவரை 334 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.