தமிழகம் முழுவதும் கொரோனவுக்கு இதுவரை 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 2 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால். அவற்றைக் கட்டுப்படுத்த மற்ற உலக நாட்களுடன், இந்தியாவும் போராடி வருகிறது.

தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மாதிரி சோதனை முடிவு வந்த பிறகே, கொரோனா இருந்ததா என தெரியவரும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி எடுக்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தெங்குமரஹடா கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கி மருத்துவ சேவை செய்து வந்த இளம் வயது மருத்துவர், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதனால். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருப்பத்தூர் வாணியம்பாடியில், அரசிடம் பீர்க்கங்காய்களை விற்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து தற்போது உயிரிழந்துள்ளார். அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், அதிக வெயில் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருப்பத்தூர் கிளைச் சிறை கைதிகள் இருவர், காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் கொரோனாவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட இந்தோனேஷியர்கள் 16 பேர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரியாலூரில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள வங்கிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செந்துறை, திருமானூர் உள்ளிட்ட 31 பகுதியிலுள்ள வங்கிகளை மூட மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 32 பேரையும் 6 வேன்கள், ஒரு பேருந்தில் ஆட்சியர் சிவராசு, மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோர் கைதட்டி அவர்களது வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனாவுக்க இதுவரை 1242 போர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரு சதவீதத்தினர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.