இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் மக்களிடம் கொரோனா தொடர்பாக சர்வே நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 1921 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியாக பதிலளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களைத் துன்புறுத்தினால் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் நடத்திய ஆலோசனையில் இந்த சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 722 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சோதனை தொடங்கியது. கொரோனா எதிரொலியாக டெல்லி - காசியாபாத் எல்லை ஏற்கனவே மூடப்பட்டு இருந்த நிலையில், டெல்லி - கவுதம் புத் நகர், நொய்டா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் அழைத்துச் செல்லக்கோரி டெல்லியில் முகாமில் தங்கியுள்ள 500 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் இதுவரை 2156 பேர் கொரோனாவால் பாதிகக்ப்பட்டள்ள நிலையில், 47 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இன்று மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். புதிதாக 112 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு 2,178 பேருக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை அங்க 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 120 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானாவில் தனிமைப்படுத்துதல் காலம் 14 நாட்களிலிருந்து 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள பெண்ணுக்கு 36 நாட்களாக கொரோனா தொற்ற இருப்பதால், கொரோனா வைரசின் வீரியத்தைக் கணிக்க முடியவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 20,482 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஊரடங்கு காரணமாகத் திரிபுராவில் சிக்கிக்கொண்ட ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் பவுரி - மனைவி மஞ்சு பவுரி தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு அதிகாரிகளின் பரிந்துரையால், 'லாக்டவுன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.