உலகளவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா என்னும் கொடிய வைரஸ், கடந்த மாதம் தான், உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.

இதனால், கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமலும், அவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமலும், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு உத்தரவைக் கையில் எடுத்தது.

ஊரடங்கு உத்தரவைக் கையில் எடுத்தாலும், கடந்த 10 நாட்களில் அதன் பாதிப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், உலக நாடுகள் செய்வதறியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன.

கொரோனா பலி எண்ணிக்கையில் ஒரே நாளில் 2 ஆயிரத்தை கடந்த முதல் நாடானது அமெரிக்கா. அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் கொரோனா என்னும் கொடிய வைரசால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 4.75 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பினால் இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டு மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இத்தாலி மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உலகிலேயே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடம் பிடித்துள்ளது. உலகிலேயே இத்தாலியில் அதிகபட்சமாக 18 ஆயிரத்து 849 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் மேலும் வீரியத்துடன் இருப்பதால், இத்தாலியில் ஏப்ரல் 13 ஆம் தேதி ஊரடங்கு நிறைவு பெற இருந்த நிலையில், மேலும் 20 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

காங்கோ நாட்டில் புதிதாக ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது. மிகச் சரியாக 1.02 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது. மிகச் சரியாக 17,00,378 ஆக அதிகரித்துள்ளது. இதனால், உலக மக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.