சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,372 ஆக அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 8,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. சென்னையில் கொரோனா மையமாகத் திகழும் ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக, 742 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையின்15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்துக்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 713 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. திரு.வி.க நகர் மண்டலத்தில் 590 பேரும் கொரோனாவால்

பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 மண்டலங்கள் தான், சென்னையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாகத் திகழ்கிறது.

மேலும், திருவெற்றியூர் பகுதியில் 98 பேரும், மணலியில் 50 பேரும், மாதவரத்தில் 65 பேரும், தண்டையார்பேட்டையில் 327 பேரும், அம்பத்தூரில் 224 பேரும், அண்ணா நகரில் 349 பேரும், தேனாம்பேட்டையில் 458 பேரும், வளசரவாக்கம் பகுதியில் 379 பேரும், ஆலந்தூரில் 46 பேரும், அடையாறு பகுதியில் 212 பேரும், பெருங்குடி பகுதியில் 51 பேரும், சோழிங்கநல்லூரில் 52 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 3 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை கொரோனா தாக்கம் காரணமாக 32 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், சென்னையில் 20 வயது முதல் 29 வயதுக்கு உட்படுத்தப்பட்டோரே கொரோனாவுக்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் கொரோனா பாதித்தோரில் ஆண்கள் 62.14 சதவீதம் பேரும், பெண்கள் 37.83 சதவீதம் பேர் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்த தெருக்கள் 690 ஆக அதிகரித்த நிலையில் அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில், 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை மட்டும் தற்போது 130 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,372 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனிடையே, தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.