சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவி உள்ள நிலையில், வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை, மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் பரவாமல் இருந்தது.

இதனிடையே, நேற்று அம்பத்தூரில் ஒருவருக்க கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், இன்று மணலி மண்டலத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 117 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 46 பேருக்கும், திரு.வி.க. நகரில் 45 பேருக்கும், தேனாம்பேட்டையில் 44 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 36 பேருக்கும், அண்ணாநகரில் 32 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது.

அதேபோல், திருவொற்றியூரில் 13 பேருக்கும், வளசரவாக்கத்தில் 10 பேருக்கும், பெருங்குடியில் 8 பேருக்கும், ஆலந்தூர் மற்றும் அடையாறில் தலா 7 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும், அம்பத்தூரில் ஒருவருக்கும், மணலியில் ஒருவருக்கம் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இதுவரை சென்னையில் 8 பேர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 86 லிருந்து 103 ஆக உயர்ந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் கொரோனா வைரசால் ஆண்கள் 66.13 சதவீதம் பேரும், பெண்கள் 33.87 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.