சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. ஆனால், தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

இதனிடையே, சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர், கொரோனா வார்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சென்னை மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2065 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1488 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1253 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1188 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 1096 பேருக்கும், அண்ணா நகரில் 924 பேருக்கும், வளசரவாக்கத்தில் 740 பேருக்கும், அடையாறு பகுதியில் 619 பேருக்கும், அம்பத்தூரில் 472 பேருக்கும், திருவொற்றியூரில் 322 பேருக்கும், மாதவரத்தில் 237 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 184 பேருக்கும், பெருங்குடியில் 185 பேருக்கும், மணலியில் 152 பேருக்கும்,
ஆலந்தூரில் 132 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

ஒட்டுமொத்தமாக, சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையின் பங்கு 65 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், ஒட்டுமொத்த உயிரிழப்பில் சென்னையில் இறந்தவர்களின் பங்கு 70.3 சதவிகிதமாகவும் இருக்கிறது.

மேலும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.06 சதவீதம் பேரும், பெண்கள் 39.92 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 1,498 பேரும், 20 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 1,424 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களில் 20 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டோர் 951 பேரும், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர் 900 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.