மே 3 ஆம் தேதிக்குப் பிறகு, சிவப்பு மண்டலத்தில் இருக்கப் போகும் தமிழக மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அது தொடர்பான பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, மே 16 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள், மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன.

இதனிடையே, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்று அரசால் பிரித்துப் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மண்டலங்களின் அடிப்படையில் தான் தற்போது கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் எல்லாம் இந்த சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், வரும் 3 ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கைத் தொடர அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மே மாதம் 4 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்றும், பல மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்” என்றும் குறிப்பிட்டு இருந்தது. அத்துடன், இது தொடர்பான விரிவான தகவல்கள், இனி வரும் நாட்களில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், வழக்கம்போல் ஊரடங்கு நீட்டிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி, மே 3 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட், விருதுநகர், வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழகத்தின் இந்த 12 மாவட்டங்களையும் சேர்த்து, நாடு முழுவதும் மொத்தம் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலாகமாக அறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்தில் உள்ளது.

சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பு உள்ளதாகவும், ஆரஞ்சு மண்டலப் பகுதிகளில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்கப்படும் என்றும், தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.